மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் பிரதமரிடம் ஒப்படைப்பு

233 0

நீட் தேர்வு தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் இல்லத்துக்கு சென்ற திருச்சி சிவா எம்.பி., பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வழங்கினார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மத்திய அரசு நடத்தும் நீட் பொதுத்தேர்வு மே மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டப்படி நடைபெறும் இந்த தேர்வு, தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற சட்ட மசோதா, தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதை ஜனாதிபதி ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து நேற்று பிரதமர் இல்லத்துக்கு சென்ற திருச்சி சிவா எம்.பி., அந்த கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வழங்கினார். அப்போது கடிதத்தை பெற்றுக்கொண்ட பிரதமர், அதை பரிசீலிப்பதாக கூறினார். மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றியும், மு.க.ஸ்டாலின் பற்றியும் விசாரித்தார் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.