தமிழக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால் கோட்டையைச் சுற்றி ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
தமிழக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. வாக்கெடுப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபைக்குள் சட்டசபை காவலர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபைக்கு வெளியே கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். கோட்டைக்கு வெளிப்புறத்தில் 5 வாசல்களும், கோட்டை வளாகத்தின் உள்பகுதியில் 5 வாசல்களும் என மொத்தம் 10 வாசல்கள் இருக்கின்றன. 10 வாசல்களிலும் செக்போஸ்ட்டுகள் அமைத்து போலீசார் கடுமையான சோதனை நடத்த உள்ளனர். நேற்று இரவில் இருந்தே கோட்டைப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இன்று கோட்டைக்குள் உரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. கார்போன்ற வாகனங்களில் செல்பவர்களும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் செல்லும் வாகனங்களும் சோதனை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களோடு அவர்கள் காரை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்ற கட்சிக்காரர்களோ? இதர நபர்களோ? எம்.எம்.ஏ.க்களோடு கோட்டைப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வளைத்தளங்களில் தகவல்கள் பரவியது.
இதையொட்டி நேற்று மெரினா காமராஜர் சாலையில், 500-க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதல் கமிஷனர் சேசஷாயி, இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே மாணவர்கள், இளைஞர்கள், மெரினாவில் போராட்டம் நடத்தப்போகிறார்கள் என்ற தகவல் பரவியதால், மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

