கூவத்தூரில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் வெளியேறினார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறி நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பினார்.
தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தொடர முடியும்.
இந்நிலையில், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து கோவை வடக்கு எம்.எல்.ஏ அருண்குமார் வெளியேறியுள்ளார். சசிகலா அணியில் இருந்த அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்:-
அதிமுக தலைமையின் முடிவை விரும்பவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை. மக்கள் விருப்ப படி புறக்கணிக்கிறேன்.கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் விருப்பப்படி நடந்துகொள்கிறேன். அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.துணைச் செயலாளர் பதவிக்கு தனது குடும்பத்தில் இருந்து ஒருவரை நியமித்துள்ளார் சசிகலா. அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.
எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார். தொகுதி மக்களின் கருத்தை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை. எந்த அணிக்கு செல்வது என்பது குறித்து தற்போது எந்த முடிவு செய்யவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.

