சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை சில நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கையில் எடுப்பது ஏற்புடையது அல்ல.
அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் வேறு எந்த கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க.வினர் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என தெரியவில்லை. இதன் மூலம் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்த அவர்கள் கருதுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

