வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரரின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

139 0

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரின் உயிர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பிற சிவில் அமைப்புக்களினால் கொழும்பு – நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரை  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அவர்கள் சுமார் இரு மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலை தடுப்பு முகாம் பெயரிடப்பட்ட்டிருந்தது.

எனினும் அவ்விருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இருவரதும் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு , நீர்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

 

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது , தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்வௌ சிறிதம்ம தேரர் உணவை உட்கொள்ள முடியாமல் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது கொலை முயற்சியாகும். இது சாதாரண நிலைமையல்ல. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த இருவரது உயிர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் கேட்டு;க் கொள்வதாகக் குறிப்பிட்டனர்.