அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விளக்கமளிக்க தங்காலை நீதிவான் ஹேமந்த புஷ்பகுமார சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரை வெள்ளிக்கிழமை (28) நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு தங்காலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நுவன் போப்பகே, தங்காலை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக முன் வைத்த விடயங்களை ஆராய்ந்து இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டிருந்தது.
அவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலை தடுப்பு முகாம் பெயரிடப்பட்டுள்ளது.
எனினும் அவ்விருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை கொழும்பில் வைத்துள்ளமை ஏன்? அங்கு வைத்து சிறிதம்ம தேரருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதா? இதுவரை அவர்களுக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் என்ன என்பது தொடர்பில் சட்டத்தரணி நுவன் போப்பகே நீதிமன்றில் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த தங்காலை நீதிவான், குறித்த விடயங்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக இன்று 28 ஆம் திகதி நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பிரசன்ன அல்விஸுக்கு அழைப்பாணை பிறப்பித்தார்.

