கௌரவமான உரிமை கோரி தலைமன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

110 0

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின், பேசாலை வசந்தபுரம் கிராமத்தில் வடக்கு, கிழக்கு மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

100 நாட்கள் செயல்முனைவின் 85ஆம் நாள் போராட்டமே நேற்றைய தினம் (24.10.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கமைய “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”, “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை“, “இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்“, “வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்“ என பல கோசங்களை எழுப்பியிருந்தனர்.

“13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே” என பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த போரட்டத்தில் முழங்காவில் பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.