புகையிரதங்களில் மோதி இருவர் பலி : 4 வயது குழந்தை காயம்

193 0

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதோடு 4 வயது குழந்தை காயமடைந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லவ

வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்லவ புகையிரத கடவையில் கல்கிஸ்ஸையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு , 4 வயது குழந்தை படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் நேற்றுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண் 28 – 35 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 அடி உயரம் 4 அங்குலமுடைய குறித்த நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கம்பளை

கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரப்னை பிரதேசத்தில் கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் மோதி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நபர் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் 50 முதல் 55 வயதிற்கு இடைப்பட்ட வர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.