மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியான சயிடம் நிறுவனத்திற்கு மருத்துவ பட்டத்தை வழங்க சட்டபூர்வமாக அதிகாரம் உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு ஆட்சேபனை தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (17) மாலை கூடிய மருத்துவ சபையின் உறுப்பினர்களால் எதிர்வரும் 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியான சயிடம் நிறுவனத்திற்கு மருத்துவ பட்டத்தை வழங்க சட்டபூர்வமாக அதிகாரம் உள்ளது என கடந்த மாதம் 31 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
சயிடம் நிறுவனத்தில் பட்டம் பெற்ற தம்மை வைத்தியத்துறையில் பதிவு செய்ய இலங்கை வைத்திய சபை மறுப்பதாக குற்றம்சாட்டி, சில மாணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தத் தீர்ப்பை வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மலலேகொட கூறியதாவது, சயிடம் நிறுவனம் வைத்தியப் பட்டத்தை வழங்குவது சட்டவிரோதம் என பிரதிவாதிகள் தரப்பான இலங்கை வைத்திய சபையால் சில ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும் அவை அனைத்தையும் நிராகரிப்பதாகவும், உயர் கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய சயிடம் நிறுவனத்திற்கு மருத்துவப் பட்டத்தை வழங்க சட்டப்படி உரிமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

