பல நாட்களாக காணாமல் போயிருந்த நபரின் சடலம் குப்பைக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்சிறிபுர, ரேஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதற்கமைய, மெல்சிறிபுர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று காணாமல் போனவரின் வீட்டை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் நேற்று (24) குறித்த நபரின் சடலம் குப்பைக் குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட போது துணியால் சுற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 69 வயதுடையவர் எனவும் அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் 43 வயதுடைய நபரொருவர் பணிக்கு வந்துள்ளதுடன் அவரும் நேற்று முன்தினம் (23) வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணங்களுக்கு இடையில் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குப்பைக் குழியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இன்று (25) நடைபெறவுள்ளது.

