காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைக்கவும்

188 0

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவிற்குப் பணிப்புரை விடுத்தது.

இதற்கமைய ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கடந்த தினம் கூடியபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதில் கோப் குழுவினால் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதுடன், இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு காணி சீரமைப்பு ஆணைக்குழுவை மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு காணிகளைக் கையகப்படுத்தும்போது காணப்படும் பிரச்சினைகள் கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்கமைய கடந்த 20 வருடங்களில் காணி கையகப்படுத்தல் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாதத்துக்குள் கோப் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவரினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அத்துடன், காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் பெறுமதியை மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்காக விசேட செயலணியொன்றை உருவாக்குமாறு கோப் குழு பரிந்துரைத்ததுடன், குறித்த செயலணியின் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விபரங்கள் அமைச்சின் செயலாளரினால் இரண்டு வாரங்களுக்குள் கோப் குழுவுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பணிப்புரை வழங்கப்பட்டது.

இந்த செயலணிக்கு நில அளவையாளர் நாயகம் அல்லது அவரின் பிரதிநிதி, அரசாங்கத்தின் மதிப்பீட்டாளர் அல்லது அவரின் பிரதிநிதி ஆகியோரை நியமிக்குமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.

மேலும், 2018 பத்துலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விரிவான அறிக்கையை கோப் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித்

பண்டார அறிவுறுத்தினார். விசேடமாக இந்த வேலைத்திட்டத்துக்காக தற்காலிகமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 214 பேர் தொடர்பில் நிர்வாகத் திணைக்களத்துடன் கலந்துரையாடி அனுமதியளிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை உள்ளீர்த்துக்கொள்ள உரிய தீர்வு எடுப்பது அவசியமாயின் அதனை அமைச்சரவைக்கு ஆற்றுப்படுத்துமாறும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதேநேரம், காணி பகிர்ந்தளிப்பு தொடர்பான தேசிய கொள்கைக்குள் காணி சீரமைப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகளை உள்ளடக்கி தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.

மேலும், 50 ஆண்டுகள் பழமையான இந்தக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தை தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்க வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்தது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 350 மில்லியன் ரூபா செலவு செய்து தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயற்கை உரம் வேலைத்திட்டம் உர உற்பத்தி தொடர்பில் அனுபவம் வாய்ந்த அரசாங்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு இரண்டு வார காலங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணாமல் போன கோப்புகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், காணாமல் போன கோப்புக்கள் பற்றிய பட்டியல் உடனடியாக கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவித்தது. நியதிச்சட்ட முறையின் கீழ் முன்னர் அடையாளம் காணப்பட்ட பயனாளிகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றி உடனயடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு பணிப்புரை விடுத்தது.

அத்துடன், இந்த ஆணைக்குழுவின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் கருத்து சுமார் 10 வருடங்களாக மறுக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கைகளை சரியாக தயாரித்து வருடாந்த அறிக்கையை 3 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டது.

மேலும், முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட கணினிக் கட்டமைப்பை உருவாக்கி மேம்படுத்துவதற்காக தனியார் கணினி நிறுவனமொன்றுக்கு செலுத்தப்பட்ட 17 மில்லியன் ரூபா பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

ஹோமாகம பிரதேசத்தில் வரிப்பத்திரம் இன்றி தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள 6 ஏக்கர் காணிக்காக அறிவிடப்படவேண்டிய  சுமார் 12 மில்லியன் ரூபாவை  மீள அறவிட்டுக் கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பணிப்புரை விடுத்துள்ளது. இதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாமை மற்றும் மதிப்பீட்டின் பெறுமதியில் 6 வீதத்துக்குப் பதிலாக 4 வீதம் அறிவிடப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இங்கு உத்தரவிடப்பட்டது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு எதிராக குத்தகைக்கான ஒப்பந்தம் இன்றி 2016ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் மதிப்பீட்டையும் மீறி இந்தக் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் இயங்கிவந்த கட்டடத்தைக் குத்தகைக்குப் பெற்றமை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அலுவலகத்தை அரசாங்கத்தின் கட்டடமொன்றுக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இரண்டு சம்பளங்களைப் பெற்றுக்கொண்ட சட்டத்தரணியான விசாரணை அதிகாரி தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரித்து 1.7 மில்லியன் ரூபா சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டியுள்ள வரி நிலுவைத் தொகையான 2 பில்லியன் ரூபா தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் திறைசேரியுடன் கலந்துரையாடி உடனடியாகத் தீர்ப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.