‘தெளிவத்தை’ ஜோசப் – ஒரு விடிவெள்ளி மறைந்தது !

352 0

லையக இலக்கியத்துறையில் அறுபதுகள் என்பது மிக முக்கியமான காலகட்டம். அதுவரை காலமும் இந்திய எழுத்துத்துறையே மலையகத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்திவந்த நிலையில் மலையகம் என்ற மண் சார்ந்த படைப்புகளையும், உலகம் திரும்பி பார்க்காத மக்களின் துயரங்களையும் தங்களது எழுத்துக்கள் மூலம் பல இளைஞர்கள்  உலகுக்கு வெளிக்கொண்டு வந்தனர். அவர்களின்  சுய படைப்புகள் அனைத்தும் மலையக இலக்கியத்துறைக்கு விடிவெள்ளிகளாக புது வெளிச்சங்களை பாய்ச்சின என்றே கூற வேண்டும்.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் இருந்து மலையகத்துக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஈழத்து இலக்கியத்துறைக்கும் கிடைத்த பொக்கிஷம் என்றால், அவர் தெளிவத்தை ஜோசப் தான்.

இவர் தனது இறுதி மூச்சு வரை இலக்கியப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஆம், இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா ‘தெளிவத்தை’ ஜோசப் தனது 88ஆவது வயதில் ஒக்டோபர் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.

மலையகத்தின் மாபெரும் இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவர், 1934ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி, பதுளை மாவட்டத்தின் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் ஆசிரியராக பணியாற்றிய  சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.

மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி என கத்தோலிக்க குடும்ப சூழலில் வளர்ந்த இறை நம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக்கொண்டு ஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தொடக்கக் கல்வியை ஆரம்பித்தார். இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தை பிறந்த இடமான தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் தனது உயர்கல்வியை தொடர சென்றார்.

மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் ஃப்ளவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார்.

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஆரம்பத்தில் தெளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக கடமையாற்றியதன் காரணமாக தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக்கொண்டார்.

அறுபதுகளில் எழுதத் தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர்.

அறுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த ‘உமா’ எனும் சஞ்சிகைக்கு அவர் எழுதிய ‘வாழைப்பழத் தோல்’ எனும் சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக பதிவாகிறது.

அதனை தொடர்ந்து இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி, மலையக எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து நடாத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 1962, 1963 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறுகதைக்கான முதல் பரிசினை பெற்று இலங்கை சிறுகதை படைப்பில் பிரபலமானார்.

 

1974ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்த ‘காலங்கள் சாவதில்லை’ எனும் புதினம் நூலாகவும் வெளிவந்து, இலங்கை சாகித்ய மண்டல பரிசுக்கு பரிந்துரையானதுடன்,  நாவல் இலக்கியத்திலும் தன்னை அடையாளப்படுத்தினார்.

1979ஆம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதை தொகுப்பான ‘நாமிருக்கும் நாடே’ வெளியானதுடன், அந்த ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்ய விருதினையும் வென்றது. சமகாலத்தில் தொழில் நிமித்தமாக பதுளை மாவட்டத்தில் இருந்து வெளியேறி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் குடியேறினார்.

இதன் பின்னர் மலையகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த மானிடர்க்காகவும், ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் தனது படைப்புகளை விரிவுபடுத்தினார். இனவாதம் தாண்டவமாடிய காலத்தில் அவர் எழுதிய ‘குடை நிழல்’ (புதினம்), ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ (புதினம்) போன்றன இதற்கு சான்று.

1989ஆம் ஆண்டு முதல் இறுதி வரை மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  பணியாற்றியவர்.

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் என இறுதி வரை இலக்கியப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர், எழுத்துத்துறைக்கு அப்பால் ஒரு ஆவண சேகரிப்பாளராக பல்வேறு இலக்கிய ஆவணங்களை திரட்டி வைத்திருப்பதுடன்; அவ்வப்போது இலக்கிய தகவல்களை பத்திரிகைகளுக்கு எழுதியும் வந்தார்.

இலக்கிய உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அயராமல் உழைத்து வந்த தெளிவத்தை ஜோசப்பின் இலக்கிய பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக்கழகங்கள், இலக்கிய அமைப்புகள், பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.

2013ஆம் ஆண்டு தமிழகத்தில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. கொடகே தேசிய சாகித்ய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக்கொண்ட இவர் கலாசார அமைச்சின் ‘தேச நேத்ரு’ விருதுக்கும் உரியவரானார்.

தனது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்காகவும் 2013ஆம் ஆண்டு தேசிய சாகித்திய பரிசு பெற்றவர். மொத்தமாக மூன்று முறை சாகித்திய விருதினை வென்றுள்ளதுடன்,  இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருதினை (2014) வென்ற முதல் மலையகத் தமிழராகவும் தெளிவத்தை ஜோசப் விளங்குகின்றார்.

மேலும், இவர் ஊவா மாகாண சாகித்திய விருது, இந்து கலாசார திணைக்களத்தின் இலக்கிய செம்மல் விருது, கலாபூசண விருது, தேசிய சாகித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத் தமிழ் ஒன்றியத்தின் விசேட விருது, கம்பன் கழக விருது, யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, மட்டக்களப்பு இலக்கிய மன்றத்தின் விருது, மத்திய மாகாண சாகித்திய விருது, மேல் மாகாண சாகித்திய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இலங்கையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும், தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்ட தெளிவத்தை ஜோசப், தான் எழுதிய ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ எனும் புதினத்துக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து கரிகாற்சோழன் விருது வழங்கி கௌரவித்தது.

இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதை தொகுதிகளையும் வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘புதிய காற்று’ திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

மலையக சிறுகதை வரலாறு உள்ளிட்ட ஆய்வுக்கட்டுரைகளையும், ஜேயார், திரேசா, சியாமளா ஆகிய புனைபெயர்களில் இலக்கிய கட்டுரைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

60களில் மலையக இலக்கியத்துறைக்கு கிடைத்த மிக உயரிய பொக்கிஷமான தெளிவத்தை ஜோசப், தனது இறுதி மூச்சு வரை எழுத்துக்காகவே தன்னை அர்பணித்த நிலையில் இறையடி சேர்ந்துள்ளார்.

அவரது இழப்பு மலையக இலக்கியத்துறைக்கு மட்டுமல்ல, இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கே மிக பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவர் மறைந்தாலும், அவரது படைப்புகள் அழிவில்லா  புகழோடு என்றும் மிளிரும் என்பதில் ஐயமில்லை.

குமார் சுகுணா