நாட்டில் பாதுகாப்பின்றி சமூக பாதுகாப்பு வரி அறவிட அரசாங்கம் முயற்சி

108 0

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியில் சென்று தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது.

இந்நிலையில்  அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காக  நாட்டில் இல்லாத பாதுகாப்பிற்காக சமூக பாதுகாப்பு  வரியினை அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் அரசிடம் இதுவரையில் உறுதியான அரசியல் கொள்கைகளும்  இல்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அதனை அவர் தெரிவித்தார்.இது தொடர்பில்  அவர் மேலும் கூறுகையில்,

வீட்டில் மின் விளக்குகளை ஒளிர செய்ய முடியவில்லை. குளிர்சாதன பெட்டி களை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியவில்லை. நீரை கொதிக்க வைத்து தேநீர் ஒன்றினை கூட குடிப்பதற்கு மக்களால் முடியாதுள்ளது.

இதனை மீறியும் நாம்  நம் தேவைகளுக்காக  மின்சாரத்தை பயன்படுத்த முயன்றால் முன்னைய மின் கட்டணத்தை விட இரட்டிப்பாக மின் கட்டணம் அறவிடப்படும் நிலை உருவாகும். ஏனெனில் அந்தளவிற்கு மின்கட்டணத்தை அதிகரித்து இருக்கிறார்கள்.

மேலும் அரசின் வரி வருமானங்களை அதிகரிப்பதற்கு வரி சட்டமூலத்தை கொண்டு வந்து தொடர்ச்சியாக தீர்வை கட்டணங்களை அதிகரிக்க முயற்சிக்கிறது .

குறிப்பாக பெறுமதி சேர் வரியினை 12 விகிதத்தில் இருந்து 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. அவ்வாறு அதிகரிக்கப்படுமாயின்  எமது அன்றாடம் கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரிக்கும்.

மேலும் சமூக பாதுகாப்பு வரி என்ற ஒன்றை அறவிட பார்க்கிறார்கள். அவ்வாறு அறவிடப்படும் பட்சத்தில்  சமூக பாதுகாப்பு வரியில் 2.5 வீதம் பெறுமதி சேர் வரியில் உள்ளடக்கப்படும். இதன் காரணமாக பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்

வரியின் பெயர் மாத்திரமே சமூக பாதுகாப்பு வரி என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மத்தியில் எங்கு சமூகப் பாதுகாப்பு காணப்படுகிறது. பெண் ஒருவர் கழுத்தில் தங்க நகை ஒன்றினை அணிந்து கொண்டு வீதியில் செல்ல முடியாது.  அவ்வாறு சென்றால் அதனை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டு செல்கிறார்கள்.

மோட்டார்சைக்கிளை பாதையில் நிறுத்தி விட்டு கடை ஒன்றிற்குள் சென்று வெளியே வரும் போது மோட்டார்சைக்கிளை திருடிச் செல்கிறார்கள். வாகனங்களை  வீட்டில் நிறுத்தி விட்டு காலையில் எழுந்து வந்து பார்க்கும் போது வாகனத்தின் உதிரி பாகங்களை திருடிச் செல்கிறார்கள்.

சமூகத்தில் எந்தவொரு பாதுகாப்பு இல்லாத நிலையில் சமூக பாதுகாப்பு எனும் பெயரில் வரியினை அறவிடுவதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் காட்டுகிறது என்றார்.