கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம்: அன்னலிங்கம் அன்னராசா

224 0

நெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் தென்னந்தோப்பில் அட்டைப் வளர்ப்பு பண்ணை கடலுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூறுவது கடலை அழித்து தென்னந்தோப்பாக மாற்ற முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று (20.10.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடா கடலில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வளர்க்கும் பண்ணை தொடர்பில் நெட்டா நிறுவன அதிகாரியை மூன்று முறை நேரில் சந்திக்க முயற்சி செய்த போதும் பயன் கிட்டவில்லை.

கடற்தொழில் அமைப்பினர் ஆகிய நாங்கள் அட்டை வளர்க்கும் பண்ணைகள் தொடர்பில் எமக்குள்ள சந்தேகங்களை கேட்டறிவதற்கு முயற்சி செய்த போதும் குறித்த அதிகாரியை சந்திக்க முடியாது.

ஆனால் குறித்த அதிகாரி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதால் பாதிப்பு ஏற்படாது என முகநூல் பக்கம் ஒன்றின் ஊடாக கடலிலோ அல்லது கடற்கரையிலோ நின்று கருத்துக் கூறாமல் தென்னந்தோப்பில் நின்று கருத்துக் கூறுகிறார்.இவருடைய செயற்பாட்டை பார்க்கும்போது அட்டை பண்ணைகளை சட்டத்திற்கு முரணான வகையில் வழங்கி கடலை தென்னந்தோப்பாக மாற்றி விடலாம் என நினைக்கிறாரா என எண்ணத் தோன்றுகிறது.

அட்டைப் பண்ணையால் கடல் வளம் பாதிக்கப்படாது என்றால் ஊடகங்கள் முன் விஞ்ஞான பூர்வமாக கூறுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம்: அன்னலிங்கம் அன்னராசா ஆதங்கம் | Ocean Turn Coconut Plantation Annarasa Aadangam

இல்லாவிட்டால் கடற்தொழில் அமைப்புக்கள் நாங்கள் வருகிறோம் ஊடகங்களுக்கு முன் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள்.

இவற்றை விடுத்து கடற்தொழில் மக்களின் குரல்களை அடக்குவதற்கோ அல்லது கடற்தொழில் சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களைக் கோருகிறோம் என தெரிவித்துள்ளார்.