சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் என்ற தீர்மானத்தால் சபையில் கடும் வாக்குவாதம்

214 0

சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை ஆங்கில மொழியில் மாத்திரம் எழுதவேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றபோது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பதில் அளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிடுகையில்,

சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சையை ஆங்கிலத்தில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானித்து, வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் கிராமப்புறங்களில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் முறையாக ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் பரீட்சைக்கு முகம்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த முறையை  நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,  1956இல் சிங்களம் மட்டும் அரச மொழியாக்கி அரசாங்கம் செய்த தவறுக்கு மாணவர்களை பழியாக்கக்கூடாது. எமது காலத்தில் நாங்கள் ஆங்கல மொழியிலேயே கற்றேன்.

அதன் பின்னர் தான் விரும்பிய தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஆங்கிலத்தில் மாத்திரம் பரீட்சை எழுதவேண்டும் என்ற வர்த்தமானி அறிவிப்பு, கொவிட் பிரச்சினை தீவிரமாகி இருந்த காலத்திலேயே வெளியிடப்பட்டது.

அப்போது இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.இது பாரிய அநீதியாகும். ஆங்கில கல்வியை இல்லாமலாக்கியது 1956 அரசாங்கமாகும் என்றார்.

அதனைத்தொடர்ந்து குறித்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடும்போது நீதி அமைச்சராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவிக்கையில்,

கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் சட்ட கல்லூரி நுழைவுப்பரீட்சையை தாய் மொழியில் எழுதி, உள்வாங்கப்பட்டாலும் அவர்களை போட்டிக்கு முகம்கொடுப்பதற்கு முடியுமான முறையிலேயே வெளியில் அனுப்பவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரிந்த சட்டத்தரணிகள் என்றும் ஆங்கிலம் தெரியாத சட்டத்தரணிகள் என்றும் வகைப்படுத்தப்படுவார்கள். கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களும் ஏனைய மாணவர்கள் போன்று ஆங்கிலம் கற்று சமநிலையில் இருப்பதற்கே இதன் மூலம் நாங்கள் முயற்சிக்கின்றோம்.

அத்துடன் வைத்துய துறை, பொறியியல் துறை, தொழிநுட்பத்துறை போன்றவற்றை ஆங்கில மொழியில் தொடர முடியுமாக இருந்தால் ஏன் சட்டத்துறைக்கு மாத்திரம் முடியாது என கேட்கின்றேன். பரீட்சையை ஆங்கிலத்தில் எழுதவைக்காதவரை அந்த மாணவர்கள் ஆங்கிலம் கற்கமாட்டார்கள்.

ஆங்கில மொழியை குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு மாத்திரம் வரையறுத்துக்கொள்ள வேண்டிய தேவை சிலருக்கு இருக்கின்றது. இது தவறு. வசதி உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டக் கல்வியை கற்கவைத்து வெளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் சிங்களத்தில் மாத்திரம் கற்று வெளிக்கு செல்லவேண்டும் என நினைக்கின்றனர்.

அத்துடன் இந்த தீர்மானம் நாங்கள் எடுத்தது அல்ல. சட்டக்கல்வி ஆணைக்குழுவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் அதனை அனுமதித்து வர்த்தமானி வெளியிட்டதை மாத்திரமே நான் செய்தேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல, ஆங்கில கல்வி அவசியம் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் இதனை நடைமுறைப்படுத்த சில காலம் வழங்கவேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து எழுந்த ரவூப் ஹக்கீம், நான் நீதி அமைச்சராக இருக்கும்போதும் இவ்வாறான யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.நானும் கிராமப்புற பாடசாலையில் கற்று, தாய் மொழியிலேயே சில பரீட்சைகளுக்கு விடை எழுதினேள். எமக்கு எது தடையாக இருக்கவில்லை. அதன் பின்னரே படிப்படியாக கற்றுவந்தோம்.  அதனால் இதனை உடனடியாக செயற்படுத்துவது மாணவர்களுக்கு அநீதியாகும் என்றார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கையில், சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்திலேயே அனைத்தும் இடம்பெறுகின்றது. அதனால் கஷ்டமாக இருந்தாலும் இதனை செயற்படுத்தவேண்டும் என்றார்.

அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கையில்,

வைத்திய்ததுறை, பொறியியல் துறைக்கு வரும் மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் கற்றே வருகின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு இந்த துறைகளில் நூறுவீதம் ஆங்கில மொழியிலேயே கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகி்றது. அதனால் 1956இல் எமக்கு தவறு ஏற்பட்டால் தற்போதாவது அதனை திருத்திக்கொண்டு முன்னுக்கு செல்வதை தடுக்கவேண்டாம் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், இது பாரிய பிரச்சினை. இதற்கு தீர்வுகாண பாலர் பாடசாலை கல்வியில் இருந்து ஆங்கில கல்வியை போதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காலம் கடந்த கல்வி முறையே இருக்கின்றது. கல்வி முறையில் ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கோத்தாபய ராஜபக்ஷ் இதற்கு முயற்சித்தார். ஆனால் அப்போது அமைச்சரவையில் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் அவர்களின்பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர்.

அத்துடன் 1956இல் சிங்களம் மாத்திரம் என்ற கொள்கையின் சாபம்தான் தற்போது எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறுதியில் நாடும் வங்குராேத்து அடைந்து நாட்டிக் கல்வியும் வங்குரோத்து இடைந்துள்ளது. அதனால் சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையை உடனடியாக ஆங்கிலத்தில் மாத்திரம் மேற்கொண்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. அதனால் படிப்படியாக, திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த மனோகணேசன் தெரிவிக்கையில், 1956இல் சிங்களம் மாத்திரம் கொண்டுவந்து செய்த தவறை தற்போது ஆங்கிலம் மாத்திரம் என தெரிவித்து அந்த தவறை மேற்கொள்ளவேண்டாம். தமிழ், சிங்களம் தேசிய மொழி. அதனால் தாய்மொழிக்கு இடமளிக்கவேண்டும் என்றார்.

இதன்போது இதற்கு நீதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நான் சட்டக்கல்லூரி பரீட்சையை சிங்கள மொழியிலேயே எழுதினேன். உயர் தர கல்வியிலும் எமக்கு ஆங்கில மொழி இருக்கவில்லை. அதன் பின்னரே ஆங்கில மொழியை கற்றேன். சட்டம் தொடர்பாக பல புத்தகங்களை நான் எழுதி இருக்கின்றேன். அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றது. அதேநேரம் எமது தாய் மொழியையும் நாங்கள் குறைத்து பதிப்பிட முடியாது. அதனையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அத்துடன் சட்டக்கல்லூரிக்கு நுழையும் போட்டிப் பரீட்சையை ஆங்கில மொழிலியில் எழுதுவதில் மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவது தொடர்பான விடயத்தை எனக்கு சுட்டிக்காட்டியதற்கு அமைய, சட்ட கற்கை நிலையத்தின் தலைவரான சட்டமா அதிபருக்கு அறிவித்து, அதனை அவர் சட்டம் கற்கை பற்றிய குழுவுக்கு சமர்ப்பித்திருந்தார். அதன் பிரகாரம் சட்டம் கற்கை பற்றிய குழு இதுதொடர்பாக கலந்துரையாடி, அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம் சட்டக்கல்லூரி நுளைவுப்பரீட்சையை ஆங்கிலத்தில் மாத்திரம் நடத்துவதற்கு எடுத்த தீர்மானத்தை அவ்வாறே செயற்படுத்துமாறே தெரிவித்திருந்தார்கள்.

என்றாலும் இதுதொடர்பாக மீண்டும் சட்டமா அதிபர் மற்றும் சட்டம் கற்கை பற்றிய குழு ஆகியோருடன் கலந்துரையாடி, இது தொடர்பான தீர்மானத்தை அறியத்தருகின்றேன் என்றார்.