40 ஆளும் கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

186 0

ஆளும் தரப்பின் சுமார் 40 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

38 இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பாலானோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நிலையான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ள நிலையில்,அதற்கு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மறுபுறம் அண்மையில் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் இதுவரை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமல் இருப்பதற்கும் ஒருசில இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

அத்துடன் அமைச்சின் விடயதானங்களின் செயற்பாடுகளுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஒருசில அமைச்சரவை அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

அதற்கமைய ஆளும் தரப்பின் சுமார் 40 உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட அவதானம் செலுத்தியுள்ளதாக பொதுஜன பெரமனவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் மந்தகரமாக செயற்படுவது தொடர்பிலும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரசன்ச அணியினரும்,டலஸ் தலைமையிலான அணியினரும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகின்றனர்.

மறுபுறம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறார்கள்.அதற்கமைய சுமார் 38பேர் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.