ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த கதியே பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படும்

190 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டு  உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு பொறுப்பாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்த கதியே பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்களின் ஆதரவுடன் ஆட்சியை முன்னெடுத்து செல்லும் நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விருப்பம் கிடையாது.

அரசியலமைப்பு திருத்தம்,தேர்தல் முறைமை திருத்தம் ஆகியவற்றின் ஊடாக அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவே முயற்சிப்பார். மக்கள் மத்தியில் சென்று வாக்கு கோரி,தேர்தல் முறைமை ஊடாக ஆட்சிக்கு வருவதை அவர் விரும்புவதில்லை.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ள வேளை தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி பொருத்தமற்ற வகையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்,தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் அந்த அறிக்கையை அமுல்படுத்தலாம்,புதிதாக தெரிவுகுழு அமைத்து காலத்தையும்,அரச நிதியையும் வீணடிக்க வேண்டிய அவசியமில்லை.

மாகாண சபை தேர்தலை போன்று உள்ளுராட்சிமன்ற தேர்தலையும் காலவரையறையின்றி பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது.

உள்ளுராட்சிமன்ற நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு பொறுப்பாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைந்து மாகாண சபை தேர்தலை திருத்தம் செய்து,சட்ட சிக்கலை ஏற்படுத்தி,மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டது.

மாகாண சபை தேர்தலை பிற்போட்டதன் பாடத்தை நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு பொது தேர்தல் ஊடாக கற்பித்தார்கள்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்கள் மத்தியில் செல்ல ஒருபோதும் அச்சமடையவில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஸ்ரீ லங்கா பொதுஜன அரசியலில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும் என்றார்.