நிதி கிடைக்கப்பெற்றும் மருந்துகளை கொள்வனவு செய்து விநியோகிக்க முடியாத நிலையில் சுகாதார அமைச்சு

178 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் நெருங்கிய சகாக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசமான தீர்மானங்கள் காரணமாக சுகாதார துறை இன்று முற்றாக பாதிக்கப்பட்டு மருந்து தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளது.

இந்நிலையில் நாட்டில்  மருந்தின்றி உயிர்கள் பலியாகும் முன்னர் உயிர்காக்கும் மருந்துகளை  அரசாங்கம் தலையிட்டு கூடிய விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மருந்து பொருட்கள் என்பது மக்களுடைய உயிர்காக்கும், மக்களுடைய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

அரசாங்கத்திற்கு  மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி கிடைக்க பெற்று இருக்கிறது. இருப்பினும் உரிய மருந்துகளை கொள்முதல் செய்து அதனை விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு முடியாதுள்ளது.

குறிப்பாக மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கடந்த 6 , 7 மாதங்களாக தீர்வுகள் பெற்று கொடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும் போது மக்களுக்கு எவ்வாறு மருந்துகளை வழங்க முடியும். மருந்துகள் பெற்று கொள்வது தொடர்பில் சட்ட விதிமுறைகள் தொடர்பில் இன்னமும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் முக்கிய சகாக்கள் பலர் சுகாதார அமைச்சின் உயர் பொறுப்புகளில் இருந்தனர்.  அவர்கள் மூலம் முறையான நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.

இந்நிலையில் அவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான தீர்மானங்கள் காரணமாகவும்,  அதன் மூலம் கிடைக்கபெற்ற விளைவுகள் மூலமாகவும்  இந்த இக்கட்டான சூழ்நிலையை தற்போது சுகாதார அமைச்சு எதிர்நோக்கியுள்ளது.

இந்த முறைமை உடன் மாற்றப்பட வேண்டும்.மருந்தின்றி உயிர்கள் பலியாகும் முன்னர் உயிர்காக்கும் மருந்துகளை கூடிய விரைவில்   பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் உடனே தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.