பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கம் சட்டங்களை இயற்ற அவதானம் செலுத்தியுள்ளது

152 0

குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை தரப்படுத்தினால் மாத்திரம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்ற அவதானம் செலுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஜனநாயக போராட்டத்தை முடக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சர்வதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் மோசமான வகையில் புனர்வாழ்வளித்தல் சட்டத்தை இயற்ற முயற்சிக்கிறது.மறுபுறம் உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து,நெருக்கடிகளை தீவிரப்படுத்து வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மாத்திரம் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுவிட முடியாது.

கருத்து சுதந்திரம்,சட்டவாட்சி கோட்பாடு நடைமுறைப்படுத்தல்,ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட பல விடயங்களை துரிதமாக செயற்படுத்துமாறு நாணய நிதியம் உட்பட சர்வதேச நிதி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.இவை குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.