குழந்தை திருமணத்தை தடுப்போம்… அமைச்சர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

169 0

குழந்தைகள் தடுப்பு திருமணம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் கூட்டம் திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்வதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு உரை ஆற்றினர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் இந்த குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிப்பு முதிர்ச்சியில்லாத அனுபவம் மற்றும் கல்வி பாதிப்பு சமூகத்து முன்னேற்றத்திற்கு தடை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் பேசினார். பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் மாணவிகள் அவர்கள் வாழும் பகுதியில் 18 வயதுக்கு நிரம்பாத பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு யாரேனும் முயற்சி செய்தால் அதை மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சொல்லி அதற்கு உண்டான அஞ்சல் அட்டையை பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. ஹசரத் பேகம், திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி துணைத்தலைவர் ஆ.சாமி ராஜ் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் விரிவாக்க அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார். மேலும் அனைத்து மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.