அட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிர கடவையில் கடமைகளில் ஈடுபட்டிருந்து இருவர் கடந்த மூன்று தினங்களாக கடமைக்கு வராத காரணத்தினால் இப்பாதையூடாக பயணிப்பதில் ஆபத்துகள் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 25 இற்கும் மேற்பட்ட பாடசலை சேவை வேன்கள் மற்றும் பஸ்கள் இக்கடவையை கடந்தே பயணிக்கின்றன.
மேலும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிறுவர் பூங்கா, அட்டன் புகையிரத நிலையம் ,தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், கப்ரியல் பெண்கள் கல்லூரி, பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கு செல்வோர் கூடுதலாக இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
இக்கடவைக்கு பகுதி நேரமாக தொழில் புரிய இருவர் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மாதம் 7,500 ரூபா அட்டன் பொலிஸ் தலைமை காரியாலயம் ஊடாக வழங்கப்பட்டு வந்தது.
எனினும் இந்த கொடுப்பனவு போதாது என்ற காரணத்தினாலேயே இவர்கள் பணிக்கு வரவில்லையென அட்டன் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி தெரிவிக்கிறார்.
இதில் இலங்கை புகையிரத சேவை திணைக்களத்துக்கும் பங்குள்ளது. ஆனால் அவர்களுக்கு கடிதம் எழுதியும் ஒன்றும் நடக்கவில்லை.
நான் இது குறித்து அட்டன்– டிக்கோயா நகர சபைத் தலைவரிடமும் கதைத்திருக்கின்றேன். இதில் பொறுப்பு கூற வேண்டிய அனைவரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இது பல உயிர்களின் பிரச்சினை. ஆகையால் இதை தட்டிக் கழித்து விட முடியாது. நிரந்தரமாக ஒருவர் நியமிக்கப்படும் வரை நான் போக்குவரத்து பொலிஸ் பிரிவுக்கு இது குறித்து அவதானம் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
இது குறித்து அட்டன் புகையிரத நிலைய அதிபரிடம் கேட்ட போது, ஆங்கிலேயர் காலத்தில் புகையிரத கடவைகள் அமைக்கப்பட்ட போது பிரதான வீதிகளை அவை ஊடறுத்து சென்ற போது பாதுகாப்பு கடவைகளை எமது திணைக்களம் அமைத்தது.
புதிதாக அமைக்கப்பட்ட உப வீதிகளுக்கு எமது திணைக்களம் பொறுப்பேற்க முடியாது. அவ்வீதிகளை அமைத்த உள்ளூராட்சி திணைக்களமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

