மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா?

250 0

மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி மருத்துவக்கல்லூரிகள் கட்டாயம் அவசியமானது. சைட்டம் கல்லூரியின் தரம் தொடர்பில்  மருத்துவ சபை கேள்வி எழுப்புவதற்கு உரிமையில்லை என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடம் அமைக்கப்பட்டபோது கோத்தாவுக்கு அஞ்சிக்கொண்டு மௌனமாக இருந்தவர்கள் இன்று  சைட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும்  ராஜித்த சேனாரட்ன குற்றம் சாட்டினார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். இதனை நாம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுபபிய கேள்விகளுக்கு பதலிளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  அங்கு மேலும்  குறிப்பிடுகையில்,

கேள்வி: சைட்டம் மருத்துவக்கல்லூரி தொடர்பில்  அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில்:  அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும்  தெளிவானது. எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி மருத்துவக்கல்லூரிகள் கட்டாயம் அவசியமானது. சைட்டம் கல்லூரியின் தரம் தொடர்பில்  மருத்துவ சபை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் இந்த மருத்துவ சபைக்கு ஒரு முறைமையான தரம் இல்லை என்பதை நான் கூறுகின்றேன்.  சாதாரண  தரம் படித்த ஒருவர் கூட மருத்துவ  படிப்பை மேற்கொள்ள முடியுமான தரமற்ற நிலைமையிலேயே  ஒருகாலத்தில் மருத்துவ சபை காணப்பட்டது. நான்  இதில் தலையிட்டு  சர்வதேச சுகாதார அமைப்புடன் சேர்ந்து   சில விடயங்களை செய்தேன்.

அந்தவகையில் தற்போது  சைட்டம் கல்லூரியின் தரம் குறித்து பேசுவதற்கு   மருத்துவ சபைக்கு தகுதியில்லை. கடந்த  ஜனாதிபதி ஆட்சிக்காலத்திலேயே இந்த கல்லூரி உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அந்த வகையில் எமது காலத்தில் இதனை ரத்துசெய்யுமாறு கோருகின்றனர்.

அதாவது மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். இதனை நாம் செய்ய முடியாது.  கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடத்தை   நிறுவியபோது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதி பெறாமல்  மருத்துவ கட்டளைச் சட்டத்தை நிறுத்தி அதனை மேற்கொண்டனர்.  காரணம் அந்த நேரம் நாட்டிலுள்ள அனைவரும்  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பயம்.

மஹிந்தவை விட  பெரிய ஒரு அதிகாரம் மிக்கவராக கோத்தபாய காணப்பட்டார். தம்பி ஒரு வௌ்ளை வேன் அனுப்ப முடியுமா என்று மஹிந்தவே கோரவேண்டிய நிலை காணப்பட்டது.   அதனால் கொத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடம் அமைப்பதில் இலங்கை மருத்துவ சபை  எதிர்ப்பு வெளியிடவில்லை.

ஆனால்  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதனை எதிர்த்தது.  எனினும் அதன்  தலைவருக்கு   கோத்தபாய ராஜபக்ஷ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி   என்ன பிரச்சினை என்று கேட்டதும்  ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டனர்.

அதுமட்டுமன்றி  அந்த மருத்துவப்பீடத்தை அங்கீகாரம் செய்வதற்க இரண்டுபக்க அறிக்கையையே மருத்துவ சபை வெளியிட்டது.  அந்தவகையில்  எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது.

இலங்கையில் உயர்தரத்திற்கு  சித்தியடையும் மாணவர்களில் 17 வீதமான மாணவர்களே  பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். 83 வீதமானவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் உள்ளனர். திறமை இன்மையால் இந்த 83 வீதமானவர்களும் வெளியில் உள்ளனர் என்று  கருதக்கூடாது.  அவர்களுக்கு நாங்கள்  நியாயம் வழங்கவேண்டும்.

இதில்   3 வீதமானவர்களுக்காவது  யாராவது ஒரு கல்லூரியை  அமைத்து சந்தர்ப்பம்  வழங்கினால் அதனை நாங்கள் வரவேற்பதுடன் வசதிகளையும் செய்து கொடுப்போம்.  அரசாங்கம்     குளியாப்பிட்டியில் ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கவுள்ளது. அதனுடன் தனியார் மருத்துவக்கல்லூரிகளையும்  ஊக்குவிக்கின்றோம்.  தனியார் மருத்துவக்கல்லூரிகளில்  கல்விகற்பதற்கு மாணவர்களுக்கு   கடன் வசதிகளையும்  அரசாங்கம் செய்து கொடுக்கும்.