முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ வடக்கில் யுத்தம் நடைபெற்றபோது தெற் கில் துப்பாக்கிகளைக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் தெற்கிலேயே சண்டித்தனத்தைக் காட்டினார். ஆனால், யுத்தம் வடக்கில் நடைபெற்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுபபிய கேள்விகளுக்கு பதலிளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-
கேள்வி: அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து செல்கின்றனவே?
பதில்: ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டால் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் வருடத்தில் 365 நாட்களில் 362 நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதுமட்டுமன்றி கடந்த 9 வருடங்களாக ஆர்ப்பாட்டம் செய்ய முடியாமல் கிடந்த மக்கள் தற்போது சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது சுதந்திரம் இருக்கின்றமையின் காரணமாக நன்றாக ஆர்ப்பாட்டம் நடக்கின்றன. அக்காலத்தில் வெள்ளைவேன்கள் வந்தன தற்போது இல்லை.
கேள்வி:- அப்படியாயின் நீங்களும் வெள்ளைவேன் அனுப்பவேண்டி வருமா?
பதில்:- தேவையில்லை. அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.
கேள்வி: நீங்கள் கூறுவதைப் பார்த்தால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய சண்டியராக இருப்பாரோ?
பதில்:- அவர் சண்டியர்தான். ஆனால் வடக்கில் யுத்தம் நடைபெற்றபோது கோத்தபாய தெற்கில் துப்பாக்கிகளைக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் தெற்கிலேயே சண்டித்தனத்தைக் காட்டினார். ஆனால் யுத்தம் வடக்கில் நடைபெற்றது.
கேள்வி:- வடக்கு யுத்தத்தில் அவர் பங்களிப்பு செய்தார் தானே?
பதில்:- ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார். ஆனால் அவர் தெற்கிலிருந்துதான் அதனை செய்தார். களத்திலிருந்து பொன்சேகா, கரன்கொட போன்றவர்களே செயற்பட்டனர். அதுமட்டுமன்றி நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் நாங்களே தெளிவுபடுத்தினோம். எனவே அனைவரும் இதில் பங்களிப்பு செய்தனர்.
கேள்வி: கருணா அம்மான் தனிக்கட்சி தொடங்கியுள்ளாரே?
பதில்: நல்லது ஆயிரம் பூக்கள் மலரட்டும்.
கேள்வி: ஏன் அப்படி கூறுகின்றீர்கள்?
பதில்: அவ்வாறு தான் அனைவரும் கூறுகின்றனர்.
கேள்வி: ஹொரனையில் அமைக்கப்படவுள்ள டயர் தொழிற்சாலையில் உரிமையாளர் யார் என்பதை அறியாமலேயே பிரதமர் திறப்புவிழாவிற்கு சென்றதாக நீங்கள் கூறினீர்கள் ஆனால் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மறுத்துள்ளாரே?
பதில்: நான் கூறியது சரியென மீண்டும் கூறுகின்றேன்.
கேள்வி: அப்படியாயின் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளாரா?
பதில்:- நிச்சயமாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்.
கேள்வி: நீங்கள் மலிக் சமரவிக்கிரமவை குற்றஞ்சாட்டுகின்றீர்களா?
பதில்;- எமது நாட்டின் ஊடகவியலாளர்கள் புத்திசாலிகள், அவர்கள் எளிதில் விடயங்களை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

