மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி மக்களுக்குத் தலைவலி, காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கான சில மருந்து வகைகள் குறித்த கடை உரிமையாளரால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் விசேட பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் அக்கடையைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
தேடுதலின் போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரை விசாரணைகளுக்குட்படுத்தியபின் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 500ற்கும் மேற்பட்ட மருந்து வகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

