போஷாக்கு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் விசேட செயலணி

187 0

போஷாக்கு தொடர்பில் விசேட செயலணியொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் , இந்த செயலணியை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் மக்களின் போஷாக்கு தொடர்பில் சுகாதார அமைச்சில்  வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஊட்டச்சத்து தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செயலணியின் அங்கத்தவர்களாக ஊட்டச்சத்து உள்ளிட்ட அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கு நிகராக 2022 – 2024 அவசர போஷாக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நடவடிக்கையாக அடுத்த வாரத்திற்குள் ஒரு மாகாணமொன்றை தேர்ந்தெடுத்து , குறித்த போஷாக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு , தொடர்ந்து அதனை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

போஷாக்கு மாதம் (ஒக்டோபர்) ஆரம்பமாகியுள்ள நிலையில் , அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களை செயற்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வைத்தியசாலைகளில் உணவு பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தி , எவ்வித குறைபாடும் இன்றி போஷாக்கு நிலைமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையின் கீழ், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக தேவையிலுள்ள குடும்பங்களை இனங்கண்டு, ஏனைய அமைச்சுக்களின் ஒத்துழைப்பைப் பெற்று இத்திட்டத்தை வினைத்திறனாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.