தைவான் குழுவினர் இந்தியா வருகை: சீனா எதிர்ப்பு – இந்தியா விளக்கம்

319 0

தைவான் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவினர் இந்தியா வந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, அரசியல் எதுவும் இல்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

தைவானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர், கடந்த 12-ஆம் தேதி  தலைநகர் புதுடெல்லி வந்திருந்தனர். டெல்லியில் உள்ள தைவானின் தைபே பொருளாதார மற்றும் கலாசார மையத்தை புதுப்பிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசிக்க வந்ததாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில், தைவான் நாடாளுமன்றக் குழுவினர் இந்தியா வந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், “ஒரே சீனம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் சீனாவின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்துகொண்டு உரிய மதிப்பளிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

இதனிடையே, சீனாவின் எதிர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ள இந்தியா, தைவான் குழுவினர் வருகையில் அரசியல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற குழுக்கள் இந்தியாவுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல, வழக்கத்துக்கு மாறான விஷயமுமல்ல என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் என்று கூறியுள்ளார்.