டாம்ஸ்ரட் றோஸ்டோவ் தமிழாலயத்தின் பதினாறாவது அகவை நிறைவு விழா.

645 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் டாம்ஸ்ரட் றோஸ்டோவ் தமிழாலயம் 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது முப்பத்தைந்தாவது ஆண்டு நினைவெழிச்சியை நெஞ்சிலே நிறுத்தி அவரது திருவுருவப் படத்திற்குப் பொதுச் சுடர், ஈகைச் சுடர், மலர்வணக்கம், அகவணக்கம் என உணர்வு பூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழாலயத்தின் அகவை விழா ஆரம்பமானது. பிரத்தியேகமாகத் தமிழாலயத்திற்கென உருவாக்கப்பட்ட வரவேற்புப் பாடல் ஒலிக்கப் பூக்கோலம் வரவேற்கப் பன்னீர் தெளித்துச் சந்தனத் திலகமிட்டு அனைவரையும் வரவேற்று மங்கலச் சுடரேற்றலுடன் விழா இனிதே ஆரம்பமாகியது. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழை முன்நிறுத்தி நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.இம் மண்டபத்தினுள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியாக கைவினைப் பொருட்களும் அதன் பயன்பாடும் என்ற வகையில் ஓர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அது பலரையும் கவர்ந்தது எனலாம். மேலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜெர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களது சிறப்புரையும், தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகனந்தம் அவர்களின் சிறப்புரையும், அஸ்றின் லிங்கிறிட் பாடசாலை அதிபர் திருமதி. சபீனா கூனன் அவர்களது வாழ்த்துரையும் விழாவிற்கு மகுடம் தரித்து போல் அமைந்தது. அதனைத் தொடர்ந்து மலர் வெளியீடும் மதிப்பீட்டு உரையும் தமிழ்க் கல்விக் கழகக் கலைப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கிச் சிறப்புச் செய்யப்பட்டது. விழா நன்றி நவிலலுடன் இனிதே நிறைவு கண்டது.