தலைமறைவாகி இருந்த தாவடி இளைஞன் கைது

100 0

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முக்கியமான சந்தேக நப​ரொருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும் வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.

இந்தக் கைது நவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.