ஈரானில் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் சாப்பிட்ட இரு பெண்கள் கைது

84 0

ஈரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டோன்யாவும் அவரது நண்பரும் ஹிஜாப் அணியாமல் உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது செயலுக்கு விளக்கத்தையும் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இரு பெண்களும் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் எவின் சிறைச்சாலை என்பது ஒரு மோசமான சிறையாக கருதப்படுகிறது. ஈரான் அரசை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் பொதுவாக இந்த சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள். இந்த சிறைச்சாலை உளவுத் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.

ஈரானில் ஹிஜாப்க்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த இளம்பெண்களின் கைது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

போராட்டம் பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.

அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.