குருந்தூர் மலை விவகாரம்: கைதான பிரதேசசபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

136 0

கடந்த 21.09.2022அன்று குமுழமுனை மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் லோகேஸ்வரனுக்கு பினையில் செல்ல அனுமதி வழங்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையைச்சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்க முயற்சிக்கின்றமை மற்றும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடர்ந்து பௌத்த கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து கடந்த 21.09.2022அன்று குமுழமுனை மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை 22.09.22 அன்று பொலிஸார் விசாரணைக்கு அழைத்து கைதுசெய்து, பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் (29.09.2022)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லோகேஸ்வரன் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் கடுமையான வாதத்தில் ஈடுபட்டார்.அதனைத் தொடர்ந்து நீதிமன்று வழக்கானது எதிர்வரும் 02.02.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.