பொருளாதாரக் குற்றங்கள்

43 0

பல்வேறு எதிரணிக்  கட்சிகளைச் சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறியவும் அதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காணவும்  பாராளுமன்ற தெரிவுக்குழுவை  நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடந்தவாரம் கடிதமொன்றை கையளித்திருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசு இயந்திரம் தவறியதா என்பதை தீர்மானிக்கவும் நெருக்கடி உருவாகுவதற்கு அரசு அதிகாரிகள் பொறுப்பாக இருந்துள்ளார்களா என்பதை கண்டுபிடிக்கவும் எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடியை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கவும் 12 உறுப்பினர்களைக் கொண்ட — மூன்று மாத தவணையுடைய தெரிவுக்குழுவை நியமிக்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டிருக்கும்  அவர்கள் எந்தவொரு நபரையும் அழைத்து விசாரிப்பதற்கும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய எந்தவொரு ஆவணத்தையும் கேட்டுப் பெறுவதற்கும் அந்த தெரிவுக்குழு ஆணையைக்  கொண்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அரசியலமைப்பின் 148 பிரிவின் பிரகாரம் நிதி மீதான அதிகாரங்களை பாராளுமன்றம் கொண்டிருப்பதால் அத்தகைய தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு ஏற்பாடுகள் உள்ளன  என்பது அந்த உறுப்பினர்களின் வாதம். குறிப்பாக, தற்போதைய சமூக பொருளாதார குளறுபடிகளைக்  கொண்டுவந்த — 2019 க்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற — நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்பதே அவர்களது  நோக்கம்.

இதுவரையில் அவர்களின் கடிதத்துக்கு சபாநாயகரிடம் இருந்து பதில் வந்ததாக செய்தி இல்லை. இலங்கை வரலாறு காணாத இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை உண்மையில் தெரியாதவர்களாகத் தான் இந்த பாராளுமன்ற  உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதத்தை எழுதினார்களா என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால்,அரசியல் நோக்கங்களுக்கு  அப்பால் அந்த நெருக்கடிக்கு பொறுப்பானவர்களை நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற வைப்பதற்கு ஒரு  பாராளுமன்ற பொறிமுறையாக தெரிவுக்குழுவை அவர்கள் கேட்கிறார்கள் என்றால் அது வரவேற்கத்தக்கது.

 

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  51 வது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட  மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை பொருளாதார நெருக்கடியை மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபடுத்திய பிறகு இலங்கையின் ‘பொருளாதாரக் குற்றங்கள் ‘ சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக மாறிய பின்புலத்தில் இந்த  பாராளுமன்ற தெரிவுக்குழு நியமனக் கோரிக்கை வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

மனித உரிமைகள்  உயர்ஸ்தானிகரின் அறிக்கை வருவதற்கு முன்னதாகவே பல சர்வதேச அமைப்புக்கள் குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை எமது பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுவந்திருக்கின்றன.தவறான பொருளாதார முகாமைத்துவம், தொலை நோக்கற்ற தீர்மானங்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் உயர்மட்ட ஊழல் மோசடிகளே பிரதான காரணிகள் என்று அவை கூறின.

மக்கள் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தவேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்ராலினா ஜோர்ஜீவா மே மாதம் புதுடில்லியில் வைத்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தவறான முகாமைத்துவத்தின் விளைவானது என்று குறிப்பிட்டார்.எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு கமிட்டியின்  தலைவர் பொப் மென்டெஸும் வேறு இரு செனட்டர்களும் கடந்த மாதம் கொண்டுவந்த  தீர்மானத்தில் எமது பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே பிரதான பொறுப்பு என்று வெளிப்படையாகக்  கூறப்பட்டது. இலங்கையின தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கு அகல்விரிவான சர்வதேச அணுமுமுறை வேண்டும் என்றும் அவர்களின் தீர்மானம் அழைப்பு விடுத்தது.

பதவி விலகுவதற்கு முன்னர்  ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்லீயின் அலுவலகம்  தயாரித்த  அறிக்கையில் ‘ பொருளாதாரக் குற்றங்கள் ‘ குறித்து பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

” பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உயர்ஸ்தானிகர் சர்வதேச சமூகத்தை ஊக்கப்படுத்துகிறார். ஆனால், அதேவேளை மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டனை பெறாமல் இருக்கும் நிலைவரம் உட்பட நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களும்  கையாளப்படவேண்டும் ” என்று அறிக்கை கூறியது. குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டனை பெறாமல் இருக்கும் நிலைவரம் குறித்து விளக்கும்போது  ” 2020 — 2022 காலப்பகுதியில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களுடன் தொடர்புடைய பல வழக்குகள் — குற்றச்சாட்டுக்கள் பல்வேறு நுட்ப நுணுக்க காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து — நிறுத்தப்பட்டன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் ஊழல் மற்றும்  அதிகார துஷ்பிரயோகம் உட்பட பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை புதிய அரசாங்கம் உரிய முறையில் கவனிக்கும் என்றும் தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவர புது வலிமையுடன் உறுதிப்பாட்டை அது  வெளிக்காட்டும் என்று உயர்ஸ்தானிகர் நம்புகிறார் என்று ‘ பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான தெரிவுகள் ‘ குறித்த பந்தியில் கூறப்பட்டு்ள்ளது.

அதாவது, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படாமல் இருக்கும் நீண்டகால நிலைவரமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுத்தது என்பதே உயர்ஸ்தானிகரின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.

ஏற்கெனவே பல அவதானிகளினால் சுட்டிக்காட்டப்பட்டதை போன்று ஐக்கிய நாடுகள் மட்டத்தில்  இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனித உரிமை மீறல்களுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

வீரகத்தி தனபாலசிங்கம்

 

அரசியல் உயர்மட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய  ஊழல் மோசடிகள்,பொதுச்சொத்து சூறையாடல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு பொறுப்புக்கூற வைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டனை பெறுவதை உறுதிப்படுத்தக்கூடிய உள்நாட்டு செயன்முறைக்கு தற்போதைய அரசியல் நிலைவரத்தின் மத்தியில் சாத்தியம் இல்லையென்பதால் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் பொருளாதாரக் குற்றங்கள் குறித்து கூறப்பட்டிருப்பதை பலரும் உண்மையில் வரவேற்கிறார்கள். ஆனால், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் ஏற்கெனவே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக  உள்நாட்டு விவகாரங்களில் வெளித்தலையீட்டை எதிர்ப்பது என்ற தேசியவாத உணர்வின்  அடிப்படையில் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல்கள் முன்னெடுக்கப்பட்ட கடந்தகால அனுபவம் காரணமாக தென்னிலங்கையில் பலரும் வெளிப்படையாக அதை வரவேற்க தயங்குகிறார்கள்.

அதேவேளை, உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று தற்போது மாற்றங்களுடன்  இரண்டாவது தடவையாக மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கும் தீர்மான வரைவில் ‘ பொருளாதாரக் குற்றங்கள் ‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.ஆனால், தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கைகளை விசாரித்து வழக்கும் தொடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்தை கோருகிறது என்றும் இது விடயத்தில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற மற்றும் ஔிவுமறைவற்ற முயற்சிகளுக்கு உதவியும் ஆதரவும் தர தயாராயிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

ஆனால்,வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி  ஜெனீவா கட்டத்தொடரில் தற்போதைய தீர்மான வரைவு வெளியிடப்படுவதற்கு முன்னர் உரையாற்றியபோது உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பொருளாதாரக் குற்றங்கள் ‘ என்ற பதம் பொருள் தெளிவின்மை கொண்டதாக இருக்கின்றது என்பதற்கு புறம்பாக அது பற்றி குறிப்பிடுவது உயர்ஸ்தானிகரின் ஆணைக்கு அப்பாற்பட்டதாகும் என்று   கூறினார்.

அவரின் அந்த கருத்தை உடனடியாகவே விமர்சித்த அவதானிகள் பலரும் ஐக்கிய நாடுகள் அகராதியில் மனித உரிமைகள் என்றால் பொருளாதார,சமூக மற்றும் கலாசார உரிமைகள் உட்பட்ட சகல மனித உரிமைகளும் தான் என்றும் அவை பிரிக்கமுடியாதவை,ஒன்றில் மற்றது தங்கியிருக்கிறது, பரஸ்பரம் ஒன்றை மற்றது வலுவூட்டுவதாக அமைகிறது என்று சுட்டிக்காட்டினார்கள்.

 

சகல உரிமைகளும் ஒன்றேதான் என்பதுடன் அவை ஒவ்வொன்றையும் மீறுவது குற்றமாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் 9 வது தடவையாக இப்போது தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு தீர்மானமும் முன்னையதை விட நீண்டதாகவும் புதிய அக்கறைகள் மற்றும் நிபந்தனைகள் சேர்க்கப்பட்டதாகவும் அமைந்தன.முதற்தடவையாக தற்போதைய தீர்மான வரைவில்தான் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்படவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியின் பின்புலத்தில் மனித உரிமை மீறல்களுடன் பொருளாதார நெருக்கடியை தொடர்புபடுத்திய உயர்ஸ்தானிகரின்  கருத்தும் தீர்மான வரைவில் ஊழல்  விசாரணை பற்றிய வலியுறுத்தலும் வந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது குறிப்பாக யாருடைய ஆட்சி இலக்குவைக்கப்படுகிறது என்பதை அலி சப்ரி புரிந்துகொண்டிருப்பார்.

இந்த நூற்றாண்டின் இதுவரையான இரு தசாப்தங்களில் இடையில் ஒரு 4 வருடங்களைத் தவிர 13 வருடங்கள் பதவியில் இருந்த ராஜபக்சாக்களின் ஆட்சியே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகும்.கோட்டாபய அரசாங்கம் குறுகிய ஒரு இரண்டரை வருடங்களில் இழைத்த பொருளாதார குற்றங்களை அவருக்காக பெரும் எண்ணிக்கையான வழக்குகளில் ஆஜரான வெளியுறவு அமைச்சர் மறுதலிக்கமுடியாது.

ஒரு பொருளாதாரம் எவ்வாறு நிருவகிக்கப்படக் கூடாது என்பதற்கு அசல் உதாரணமாக உலக நாடுகள் இன்று இலங்கையை நோக்குகின்ற நிலையில் அத்தகைய அபகீர்த்தியை ஏற்படுத்தியதற்கு பொறுப்பானவர்கள்  பதில்கூறும் கடப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல இடமளிக்கக்கூடாது.

அரசியல் ஊழல்மயமாகியும் ஊழல் அரசியல்மயமாகியும் இருக்கும் எமது நாட்டில் அரசியல் உயர்மட்ட பொருளாதார குற்றங்களை  விசாரணைசெய்ய உள்நாட்டு செயன்முறை முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது.அதனால் தெரிவுக்குழுவை நியமிக்கவேண்டும் என்ற எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு சபாநாயகர் சாதகமான பதிலை அளிக்கக்கூடிய சாத்தியம் குறித்து சந்தேகம் எழுகிறது.