ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்சியில் கூவத்தூர் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, இதுவே வாடிக்கையாகி விட்டது. இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்.
இவ்வாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக கொலை செய்யப்பட்டார், அதேபோல அரியலூர் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு, அந்தக் கருவையே சிதைத்து கொலை செய்யப்பட்ட கொடுமை நடந்தது. அ.தி.மு.க.வை சார்ந்த தொண்டர்களே பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் வாட்ஸ் அப்பில் பரவுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கண்டுபிடித்து, கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, கூவத்தூரில் நேற்றிலிருந்து மிகப்பெரிய அளவில், ராணுவத்தினரை போன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கோவளத்தில் சாலை மறியலை போலீசார் தடுத்து நிறுத்தியதாக தெரியவந்துள்ளது. இப்படித்தான் காவல்துறை செயல்பாடு இருக்கிறதே தவிர, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நிலையிலோ, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலையிலோ இன்றைக்கு காவல்துறை இல்லை என்பதற்கு இவை சாட்சிகளாக இருக்கின்றன.
சசிகலா தான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று ஒரு அணி சொல்லிக் கொண்டிருந்தது. இன்று அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக குற்றவாளிகளைத் தான் முதல்-அமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், நீதிபதி குன்காவின் தீர்ப்பு வெளியான போது அதனை தி.மு.க.வின் சதி என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, காவடி எடுத்தார்கள், அலகு குத்திக்கொண்டு, மொட்டையடித்து, தாடி வளர்த்துக் கொண்டு, இப்படியெல்லாம் பலவற்றை செய்து, தி.மு.க. மீதும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்றைக்கு அதே தீர்ப்பை நியாயமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அப்போது யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிப்பு கொடுக்கிறார்கள். பட்டாசு வெடிக்கிறார்கள். வழக்கு போட்டது இப்போது எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.. இந்த தீர்ப்பில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் கூட அதை கொண்டாடவில்லை. ஆனால் அ.தி.மு.க.வினர் இதை பெரிதாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அது தான் வேடிக்கையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

