‘ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது’ சுப்பிரமணியசாமி சொல்கிறார்

354 0

ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்- அமைச்சர் ஆகவே கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது

சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இது மிகப்பெரிய வெற்றி. சுப்ரீம் கோர்ட்டு புது மார்க்கத்தை தந்திருக்கிறது. நீதிபதி அமிதவ ராய், தனியாக ஒரு அறிக்கை தந்திருக்கிறார். ஊழலை தடுக்க தார்மீக பொறுப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கில் நான் வாதம் செய்யும்போது, ‘இதைப்போல எல்லா ஊழல் வழக்குகளிலும் வாதிடுவீர்களா?’ என்று அவர் கேட்டார். ‘நிச்சயம் வாதாடுவேன்’ என்றேன். இந்த நாட்டை முன்னேற்றவேண்டும் என்றால் ஊழலை ஒழிக்க வேண்டும். இந்த தீர்ப்பு அதற்கு சாதகமாக இருக்கும்.

சசிகலா உள்ளிட்டோரை உடனே கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி கூறியிருக்கிறார். உடனே என்பதற்கான கால அவகாசம் 24 மணி நேரத்துக்குள் இருக்கும் என நினைக்கிறேன்.

அ.தி.மு.க.வுக்கு தலைமை சசிகலாதான். அவருக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது?. நிர்ப்பந்தத்தினால் ராஜினாமா செய்ததாக அவர் சொல்கிறார். ஒரு முதல்- அமைச்சர் இப்படி சொல்லலாமா? இவரை போன்றவர்கள் முதல் அமைச்சர் ஆகவே கூடாது.

சட்டப்படி யார் பெரும்பான்மை பட்டியலை கொடுக் கிறார்களோ அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து, சட்டசபையை கூட்டவேண்டும். பெரும்பான்மை பட்டியலை கவர்னரிடம் சசிகலா ஏற்கனவே அளித்து இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்திடம் பெரும்பான்மை பட்டியல் கிடையாது. அ.தி. மு.க. பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படும் புதிய தலைவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று
அவர் கூறினார்.