காஷ்மீருக்குள் ஊடுருவ, எல்லையில் 65 அடி நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைத்த பயங்கரவாதிகள்

463 0

காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக எல்லையில் பயங்கரவாதிகள் அமைத்த 65 அடி நீள சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதனால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தக்க நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவதை தடுக்க இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச எல்லை யில் அமைந்த சம்பா மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்திய ராணுவம் கம்பி வேலி அமைத்து உள்ளது.

தவிர இந்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவதற்காக சுரங்கப்பாதை அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம், சம்பா மாவட்டத்தின் ராம்கார் செக்டாரில் உள்ள பத்வால் ராணுவ நிலை அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த வயல்வெளியில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைவதற்காக 65 அடி நீள சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

2.5 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்ட அந்த சுரங்கப்பாதை முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பாதையை மூடுவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது படையினர் மீது பாகிஸ்தான் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் 3 தடவை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

சுரங்கப்பாதை தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தர்மேந்திர பரேக் நிருபர்களிடம் கூறுகையில், “சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் சுரங்கப்பாதை அமைக் கின்றனரா? என்பதை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில்தான் பயங்கரவாதிகள் சுரங்கம் அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடக்கம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருக்கிறது. தக்க நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

இன்னொரு உயர் அதிகாரி கூறும்போது, “சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் அமைத்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அடுத்து நடைபெற இருக்கும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் முறையிடுவோம்” என்று குறிப்பிட்டார்.