மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் கொள்ளையர்களை பிடிக்க பொதுமக்களின் ஆதரவை நாடும் காவற்துறை

333 0

மேல்மாகாணத்தின் கொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு ஆயுதங்களுடனான இரண்டு கொள்ளையர்கள் நிதி நிறுவனமொன்றை கொள்ளையிடும் சிசிடிவி காட்சி அடங்கிய காணொளியொன்றை காவற்துறை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.

இது தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்குமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களில் கொள்ளையிட்டுள்ள இந்த கொள்ளையர்கள் இருவரும் மதிய நேரத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு நிதி நிறுவனத்தினுள் நுழைந்து இந்த கொள்ளையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

உந்துருளியில் ஆயுதங்களுடன் வரும் இவர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு செல்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் , வத்தளை , கிரிபத்கொடை போன்ற பிரதேசங்களின் இரண்டு நிதி நிறுவனங்களிலும் , அரகாவில பிரதேசத்தின் பிராந்திய அபிவிருத்தி வங்கியிலும் , பாணந்துறை தெற்கு பிரதேசத்தின்வணிக காட்சிக்கூடம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பலவற்றில் இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

இந்த கொள்ளையர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களை கோரியுள்ள காவற்துறையினர் , அவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக 071-8592604 / 071-8591840 / 071-8591596 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.