ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் – தீபாவுடன் திடீர் சந்திப்பு

234 0

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேற்றிரவு(14) திடீரென்று வந்த முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சந்தித்தார்.   இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தலைவராக சசிகலாவால் அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென்று தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றார்.

அவர் கவர்னரை சந்திப்பதற்காக செல்வதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் கார் மெரினா கடற்கரை நோக்கி சென்றது. அவரது காருக்கு பின்னால் அவரது ஆதரவாளர்களின் கார்களும் அணிவகுத்து வந்தன.

சற்று நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அந்த கார்களின் அணிவகுப்பு வந்து சேர்ந்தன. அவர்கள் வந்துசேர்ந்த சில நிமிடங்களில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் ஜெயலிதாவின் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரை ஆதரிக்கும் முக்கிய எம்.எல்.ஏ.க்கள் மூத்த தலைவர்கள் பொன்னையன், பி.எச். பாண்டியன், மதுசூதனன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலா தன்னிடம் மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முன்னர் இதே இடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம் இன்னும் சற்று நேரத்தில் முக்கியமான அறிவிப்பு ஏதாவது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.