பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும். வெளியாட்களின் குரல் பதிவுகளை ஒலிவாங்கியில் ஒலிக்கவிடுவது பிழையான நடவடிக்கை அதனை செய்யவேண்டாம் என சபாநாயகர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவுக்கு அறிவுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்து எதிர்க்கட்சியில் இருக்கும் கே,பி.எஸ். குமாரசிறி விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், பொலன்னறுவை விலச்சி கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்கள் உணவு உட்கொள்ளாமல் மயங்கி விழுந்துள்ளனர்.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொடை கல்வி வலயத்தில் மாணவர் ஒருவர் தேங்காய் துண்டுகளை பகல் உணவுக்காக கொண்டுவந்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் மாணவர்களின் இந்த நிலைமையை இல்லாமலாக்க அரசாங்கம் முறையாக வேலைத்திட்டம் அமைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வல பதிலளிக்கையில், மினுவங்கொடை கல்வி வலயத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான செய்தி வெளிவந்ததுடன் அதுதொடர்பில் குறித்த பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு கதைத்தேன். அந்த பாடசாலை மிகவும் சிறிய பாடசாலை. 15 ஆசிரியர்களே அங்கு இருக்கின்றனர்.
அதிபர் தெரிவிக்கையில், இந்த செய்தி கேள்விப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி குழு கூடி, இதுதொடர்பில் கலந்துரையாடியதாகவும், பாடசாலை ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து இதுதொடர்பாக விசாரித்தபோது, இதுதொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றே தெரிலித்தாகவும் அதிபர் தெரிவித்தார் என குறிப்பிட்டு, அதிபர் தெரிவித்த தொலைபேசி குரல் பதிவை அமைச்சர் ஒலிவாங்கியில் ஒலிக்கச்செய்தார்.
இதன்போது சபாநாயகர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கலவை பார்த்து, பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே உரையாற்ற முடியும். வெளியாட்களுக்கு உரையாற்ற முடியாது. அதனால் வெளியாட்களின் தொலைபேசி குரல் பதிவை ஒலிவாங்கியில் ஒலிக்கச்செய்வது பிழையான நடவடிக்கை என அறிவுறுத்தினார்.

