தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து 26ம் தேதி அறவழியில் போராட்டம் – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

19 0

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தி.மு.க. எம்.பி. ராஜாவை திறனற்ற தி.மு.க. அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ராஜாவை கண்டித்ததற்காக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல்துறை கைது செய்துள்ளதை தமிழக பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது.

மத கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ராஜாவை கைது செய்யாமல் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய, அவரது இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ.க. மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்? தி.மு.க. அரசின் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம்.

உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவர். ஆ.ராசாவின் அவலத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை நடத்துவோம். மாபெரும் அறவழி போராட்டத்தை 26-ம் தேதி நடத்துவோம். ஆளுங்கட்சியின் அவலத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.