மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை 2.30 லட்சமாக அதிகரிப்பு: நிர்வாக இயக்குனர் சித்திக் தகவல்

20 0

சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 15 பெண்கள் உள்பட 180 டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதில் அலுவலக நேரங்களான காலை 8 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகின்றன. பொதுவாக அலுவலக நேரங்களில் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் 30 சதவீதம் பேர் கியூ.ஆர். கோடு முறையிலும், 70 சதவீதம் பேர் பயண அட்டையும், சிலர் டோக்கன்களையும் பெற்று பயணம் செய்கின்றனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது:-

சென்னையில் லண்டன், ரோம் நகரங்களைவிட கூடுதலாகவும், சிங்கப்பூர், தென்கொரியா தலைநகர் சியோல், சீனா தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காயில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் போன்றும் சர்வதேச தரத்தில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுகிறது. குறிப்பாக பாதுகாப்பு, நேரந்தவறாமை, களைப்பின்மை, சொகுசு பயணம் அளிக்கப்படுவதால் தற்போது நாள் ஒன்றுக்கு 2.30 லட்சமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.