சமபோஷா திருடியவருக்கு 51 நாட்களின் பின் பிணை

76 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட போது, அவ்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சமபோஷ பக்கெட்டை திருடிய குற்றச்சாட்டில் 51 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உள்ளிட்ட 06 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை  நீதவான் திலின கமகே  உத்தரவிட்டார்.

கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் (ஜூலை 9 சம்பவம்) தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரித்து வரும் நிலையில், அது குறித்த வழக்கு நேற்று (21) கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை, அவர்களின் வயது மற்றும் விசாரணையின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு பிணை வழங்க தீர்மானித்ததாக நீதவான் திலின கமகே திறந்த மன்றில்  அறிவித்தார்.

எவ்வாறாயினும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தல்களை திருடிய நால்வரின் விளக்கமறியல் காலத்தை நீதிவான் நீடித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிமாக வாக்குமூலங்களை பெறுவதற்கும் அவர்களது வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி  தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, விசாரணையாளர்களான சி.ஐ.டி. அதிகாரிகளுடன் அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர மன்றில் ஆஜராகி  விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில்  புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தொடர்பில்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர நீதிமன்றுக்கு அறிவித்தார்.

விசாரணை நிலைமை தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

‘ஜனாதிபதியின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில்,  வீட்டுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வுத் திணைக்களம் ஊடாக அறிக்கை கோரியுள்ளோம். அத்துடன்  பெறுமதி மதிப்பீட்டு திணைக்களம் ஊடாகவும் அறிக்கை கோரியுள்ளோம். இதுவரையிலேயே பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 604 பேரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் பதிவான ஜூலை 9 ஆம் திகதி, அப்பகுதியின் தொலைபேசி கோபுர தகவல்களை மையப்படுத்தியும் விசாரணைகள் நடாத்தப்பட்டன.  இதன்போது  அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கும் இரவு 11.00 மணிக்கும் இடையே  2 இலட்சத்து 19 ஆயிரத்து 629 தொலைபேசி அழைப்புக்கள் பரிமாற்றப்பட்டுள்ளன.

அதில் மாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில்  ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 721 அழைப்புக்கள் பறிமாற்றப்பட்டுள்ளன.  இது தொடர்பில் மேலதிகமாக பகுப்பாய்வு செய்த போது, விசாரணைக்கு தேவையான  39 ஆயிரத்து 732 தொலைபேசி அழைப்புக்கள்  பரிமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ‘ என மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அதன்படி இந்த விவகார வழக்கானது எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.