சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருடன் அலி சப்ரி விசேட சந்திப்பு

67 0

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமான நிலையில், பொதுச்சபை அமர்வின் உயர்மட்ட விவாதம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை (20) ஆரம்பானது.

அதில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பொதுச்சபை அமர்வில் உரையாற்றியதுடன் மேலும் பல முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களை நடாத்தியிருக்கின்றார்.

அதற்கமைய சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் பிரதி தலைமை அதிகாரி இஸபெல் கோல்மென், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட், சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான், உஸ்பெகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் விளாடிமிர் நொரோவ், ஆர்மேனிய வெளிவிவகார அமைச்சர் அரராற் மிர்ஸோயான் ஆகியோருடனான சந்திப்புக்களின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பல்துறைசார் அடிப்படைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புதல், சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல், தற்போதைய பூகோள ரீதியான சவால்களை எதிர்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்புக்களின்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.