சட்டமா அதிபர் பக்கசார்பானவர்: மேஜர் அஜித் பிரசன்ன

254 0

சட்டமா அதிபர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாக கூறி தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தொடர்பான விசாரணைகளை மே மாதம் 17 ஆம் திகதி நடத்துவதாக பியசாத் டெப் உட்பட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி அஜித் பிரசன்ன தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் வேறு ஒரு கட்சியில் போட்டியிட்டு தோல்விடைந்த பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை மூலம் மக்களின் சுயாதிப்பத்தியத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக அஜித் பிரசன்ன தனது மனுவில் கூறியுள்ளார்.

மேஜர் அஜித் பிரசன்ன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.