300 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே தடவையில் ஓய்வு பெறுவது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்

244 0

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்கத்திடம் நிலையான கொள்கை இல்லை. ஓய்வு பெறும் வயது தொடர்பில் இறுதியாக தெரிவிக்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் விசேட வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஒரேநாளில் ஓய்வு பெறுவார்கள்.

இது வைத்திய கட்டமைப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிபட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எமது அரசாங்க காலத்தில் 63ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. என்றாலும் 2022 வரவு செலவு திட்ட யோசனையின் போது இந்த அரசாங்கம் அதனை 65ஆக மாற்றியது.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தின்போது அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக மாற்றினார்கள்.

பின்னர் செப்டம்பர் மாதம் 63வயதாக அறிவிப்பு செய்தார்கள். இறுதியாக செப்டெம்பர் 14ஆம் திகதி ஓய்வு பெறும் வயதை 60ஆக மாற்றி இருக்கின்றார்கள்.

இதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி ஒரேநாளில் விசேட வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஓய்வு பெற்று செல்கின்றார்கள். இதன் மூலம் சுகாதார துறையில் பாரிய பின்னடைவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

குறிப்பாக குறுதி ஏற்றும் விசேட வைத்தியர்கள் 33பேர் இருக்கின்றனர். 8பேர் ஓய்வு பெற இருக்கின்றனர். 2பேர் ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளனர்.

5 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளனர். 4 பேர் நாட்டைவிட்டு செல்ல தயாராக இருக்கின்றனர். இவ்வாறு ஒரே தடவையில் 14பேர் குறைவடையும்போது அந்த துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது.

அதேபோன்று இன்னும் முக்கியமான துறைகளில் வைத்தியர்களின் பற்றாக்குறை இடம்பெறும் நிலை  ஏற்படப்போகின்றது.

அத்துடன் டிசம்பர் மாதத்தில் ஓய்வு பெறும் வைத்தியர்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஒரே தடவையாக 43 பேரும் கண்டி வைத்திய சாலையில் இருந்து 30 பேரும் கராப்பிடி வைத்தியசாலையில் இருந்து 17பேரும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் இருந்து 15பேரும் அபேக்ஷா வைத்தியசாலையில் இருந்து 9பேரும் ஓய்வு பெறுகின்றனர்.

அதேபோன்று வைத்தியர்களில் அதிகமானவர்கள் வெளிநாட்டு அனுமதி பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்புக்கு வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் வைத்தியர்கள் மீண்டும் நாட்டுக்கு வருவது தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே விசேட வைத்தியர்கள் ஒரே நாளில் இந்தளவு தொகையினர் ஓய்வு பெறுவது பாரிய பிரச்சினையாகும். விசேட வைத்தியர்கள் ஓய்வு பெற்றுச்செல்லும்போது பட்டப்பின் படிப்பை முன்னெடுக்கும் வைத்தியர்களை பயிற்றுவிக்க வைத்தியர்கள் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது.

அதனால் உரம் தடைசெய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அழிவைப்போன்று விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே தடவையில் ஓய்வு பெறுவதன் மூலம் நாட்டில் பாரிய பேரழிவு ஏற்படும்.  எனவே இதுதொடர்பில் கவனம் செலுத்தி சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரத்துறை வீழ்ச்சயடைந்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பாக அமையும் என்றார்.