நாட்டில் தற்போது மக்கள் பலம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடமே காணப்படுகிறது. எனவே அவருடன் இணைந்து , அவரது அரசியல் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்ககுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வருடாந்தம் விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்து எம்மை சந்தித்து கலந்துரையாடுவார். அவ்வாறு இம்முறை இடம்பெற்ற சந்திப்பின் போது அவரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்தேன். தற்போது மக்கள் பலம் சஜித் பிரேமதாசவிற்கே காணப்படுகிறது. எனவே தான் அவருடன் இணைந்து செயற்படுமாறு கோருகின்றேன் என்பதையும் வலியுறுத்தியிருந்தேன்.
குமார வெல்கம கட்சியொன்றை உருவாக்கினாலும் , சந்திரிகா குமாரதுங்க காணப்பட்டாலும் மீண்டும் வெளிநாட்டிலிருந்து ஒருவரை அழைத்து வந்து நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கு எவரும் இடமளிக்கப் போவதில்லை. நாட்டைப்பற்றி கீழ் மட்டத்திலிருந்து அறியாத ஒருவர் பின்னர் இனியொருபோதும் செல்ல மாட்டோம். நான் குமாரவெல்கமவுடன் இல்லை. எனவே அவர்கள் என்ன செய்யவுள்ளனர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
நான் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி தாவியது கிடையாது. கடந்த அரசாங்கங்களில் 5 அமைச்சுப்பதவிகளை வகித்திருக்கின்றேன். ஆனால் ஒருசதமேனும் மோசடி செய்ததில்லை. ராஜபக்ஷாக்கள் தவறான பாதையில் பயணிக்க தொடங்கிய போதே நான் நேரடியாகவே அவர்களது தவறை சுட்டிக்காட்டி, அங்கிருந்து வெளியேறினேன். தற்போது அவர்கள் வீசும் எழும்புகளுக்காக பின்னால் ஓட வேண்டிய தேவை எனக்கில்லை. ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்டால் அதுவே போதுமானது என்றார்.

