மங்கள குறித்து அதிகாரி சமந்தா பவர் உருக்கமான பதிவு

147 0

இலங்கையர்கள் மிகப்பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மங்கள சமரவீரவின் தூரநோக்கு சிந்தனை, இளைஞர்களுடனான அவரது தொடர்பு மற்றும் அவருடைய தனித்துவமிக்க போக்கு என்பவற்றின் இழப்பு மிகத்தீவிரமாக உணரப்படுகின்றது என்று அவருடைய நெருங்கிய நண்பரும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரியுமான சமந்தா பவர் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர், இதன்போது ஜனாதிபதி, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், உரத்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சமந்தா பவர், அவரது நீண்டகால நண்பரான முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த மங்கள சமரவீரவை நினைவுகூர்ந்திருக்கின்றார்.

மங்கள சமரவீர குறித்து அவர் அப்பதிவில் கூறியிருப்பதாவது:

எனது நண்பரான காலஞ்சென்ற மங்கள சமரவீரவின் உயிரோட்டம் நிறைந்த நோக்கு இலங்கையில் எங்கும் வியாபித்திருப்பது குறித்து நெகிழ்ச்சியடைகின்றேன்.

மங்கள சமரவீர  தேர்ந்த அறிவு மற்றும் புத்தாக்க சிந்தனையுடைய, நாட்டை முன்னிலைப்படுத்தக்கூடிய ஓர் அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார்துறைசார் பிரதிநிதிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகளுடனான எனது சந்திப்பின்போது மங்கள சமரவீரவின் யோசனைகள், கருத்துக்கள் மற்றும் அவர் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கங்கள் என்பன தொடர்பில் நினைவுகூரப்பட்டு, பெரிதும் விவாதிக்கப்பட்டதுடன் அதன்போது மங்கள சமரவீர அங்கு வரவேண்டுமென நான் எதிர்பார்ப்பதை என்னால் உணர்ந்துகொள்ளமுடிந்தது.

இலங்கையர்கள் மிகப்பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் மங்கள சமரவீரவின் தூரநோக்கு சிந்தனை, இளைஞர்களுடனான அவரது தொடர்பு மற்றும் அவருடைய தனித்துவமிக்க போக்கு என்பவற்றின் இழப்பு மிகத்தீவிரமாக உணரப்படுகின்றது.

இருப்பினும் அவருடைய இழப்பினால் நாமனைவரும் துன்பமடைந்தாலும், அவருடைய நினைவுகளை நாம் தொடர்ந்து முன்மாதிரியாகக்கொண்டு செயற்படமுடியும் என்று நம்புகின்றோம். நான் அதனைச் செய்வேன் என்பதை நானறிவேன் என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.