பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஐ.நா முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முதல் உலகளாவிய காங்கிரஸில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியா கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அரச ஆதரவுடனான எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பலியாகி வருவதாகவும், பயங்கரவாதத்தின் மனித விலை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதன் நீடித்த தாக்கத்தை ஆழமாக புரிந்துகொள்வதாகவும் காம்போஜ் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதற்கும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களால் இயன்றதைச் செய்வதற்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்’ என்றும் கூறனார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பயங்கரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தல்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வலியுறுத்தியுள்ளார். நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உண்மையில், பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தை வரையறுக்கும் மதிப்புகள் மீதான தாக்குதலாகும். வாழ்வதற்கான உரிமை உட்பட மனித உரிமைகளின் அனுபவத்தை தீவிரமாக பாதிக்கிறது என்றார்.
குறிப்பாக பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறல்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாக்க பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டியது முற்றிலும் அவசியம்.
குற்றவாளிகள், உதவியாளர்கள் மற்றும் நிதியளிப்பவர்கள் அரசின் ஆதரவையும் விருந்தோம்பலையும் அனுபவித்து சுதந்திரமாக நடந்துகொள்வதால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களின் வலி மற்றும் துன்பங்கள் நீதிக்கான உரிமை மறுக்கப்படும்போது பெருகும் என்று அவர் குறிப்பிட்டார்.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2016 பதான்கோட் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை நினைவு கூர்ந்த காம்போஜ், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சர்வதேச சமூகம் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

