கோட்டாவின் மீள்வருகை ‘மொட்டு’க்கு குறைமதிப்பா?

148 0

மக்கள் ஆர்ப்பாட்டத்தால் நாட்டை விட்டுச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மீண்டும் நாடு திரும்பியுள்ளமை குறித்து பலரும் பல விதமாக பேசினாலும், இதன் பின்னணியில்அவரது பாதுகாப்பு குறித்த காரணங்களே பிரதான இடத்தை வகிக்கின்றன. அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாடுகளின் சட்டப்படி அவர் ஒரு சாதாரண வெளிநாட்டு நபர் தான். முன்னாள் ஜனாதிபதி என்ற சலுகைகளையும் பாதுகாப்பையும் அவர் வெளிநாடுகளில் எதிர்ப்பார்க்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

தாய்லாந்தில், அவர் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே வரவில்லை. இராஜதந்திர நட்பின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்பதால் தாய்லாந்து அரசாங்கம் ஓரளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கலாம். அதற்கு அப்பால் எதனையும் தாய்லாந்து அரசு செய்ய முடியாது. ஆகவே தான் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை கருத்திற்கொண்டே நாடு திரும்பியிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் ஏனைய சலுகைகள்  என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டது. ஆனால் அந்தச்சலுகைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தகுதியானவரா என்ற சர்ச்சைகள் உள்ளன. இதை பேசுபொருளாக்காமலிருக்கவே மொட்டு கட்சியினர் வேறு கதைகளை கூறித்திரிகின்றனர். அவர் தேசிய பட்டில் ஊடாக மீண்டும் பாராளுமன்றத்துக்கு வரப்போகிறார் என்று ஒரு சாராரும் அவர் பிரதமராகப்போகின்றார் என்று மற்றுமொரு சாராரும் புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகளை கோட்டாபய அனுபவிக்க முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். கோட்டபாய தனது பதவி காலம் முடிந்து ஓய்வு பெறவில்லை. அவர் அரைவாசியில் சேவையிலிருந்து விலகிய ஒருவராகவே கருதப்படுகின்றார். ஆகவே இவ்வாறு சேவையிலிருந்து விலகிய ஒருவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை அரசியலமைப்புச் சட்டப்படி சிறப்புரிமை என்ற பெயரில் எப்படி வழங்கலாம் என்பதே அவரது கேள்வியாக உள்ளது.

இதேவேளை கோட்டாபய நாடு திரும்பிய 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று விமான நிலையத்துக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் எவரும் செல்லவில்லை. அது அரசியல்ரீதியாக இன்னும் நாட்டு மக்களை கோபமுறச்செய்யும் என்பது ஒருகாரணம்.

ஆனால் மறுநாள் சனிக்கிழமை மஹிந்த, கோட்டாபாயவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ஜனாதிபதியாக செயற்பட்ட காலங்களில் அவரது கொள்கைகள் ,தீர்மானங்கள் குறித்து மக்கள் அவர் மீது கொண்டிருந்த கோபத்தை விட, மஹிந்த மீது கொண்டிருந்த கோபமே அதிகமாக இருந்தது. ஏனென்றால்  கோட்டாபயவை கைப்பிடித்து அரசியலுக்கு இழுத்து வந்தவர் மஹிந்தவே.

இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்து யுத்தத்தையும் முடித்து வைத்தவர் என்ற பெருமையோடு நாட்டு மக்களிடையே வலம் வந்த அவர், ஜனாதிபதியை தெரிவு செய்வதில் மாபெரும் தவறிழைத்து விட்டதாகவே மக்கள் கருதினர். அதன் காரணமாக பிரதமராக இருந்த அவர் மீது மக்கள் முதலில் தமது சினத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் விமான நிலையத்துக்கு செல்வதை அவர் தவிர்த்திருந்தார். மேலும் இவ்வளவுக்கும் காரணம் கோட்டாபய தான் என்ற கோபமும் உள்ளூர அவருக்கு இருந்திருக்கும்.

எனினும் அதையும் தாண்டிய சகோதர பாசம் மற்றும் குடும்ப பிணைப்பை அரசியலுக்காக விட்டுக்கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் கோட்டாபயவை சந்திக்க சென்றிருக்கலாம். மஹிந்தவுக்கு எந்தளவுக்கு கோட்டாபய மீது கோபம் இருக்குமோ அதேயளவுக்கு மஹிந்த மீதும் கோட்டாபயவுக்கு ஆத்திரம் இருக்கும்.

மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அசைக்க முடியாத பாதுகாப்பு செயலாளராக வலம் வந்தவர் கோட்டாபய. அவருக்கு தெரியாத  அரசியலுக்கு இழுத்து வந்து, ஜனாதிபதியாக்கி, நாட்டை விட்டு ஒரு அகதியைப் போன்று ஓடச்செய்து இறுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் நாட்டுக்கு வந்து ‘இல்லச் சிறையில்’ அடைந்து கிடப்பதை அவரால் எவ்வாறு தான் ஜீரணித்து கொள்ள முடியும்?

வழக்கு தொடரப்படுமா? 

தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக மீண்டும் கோட்டாபய இலங்கை வந்தாலும் தற்போது அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுமா , சட்டத்தின் முன்பு அவர் நிறுத்தப்படுவாரா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் அது குறித்து தற்போது ஊடகங்கள் பகிரங்கமாகவே பேசுகின்றன.

அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டிருந்தனர். ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னலியகொட காணாமல் போனமை தொடர்பில் அவர் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆகவே இந்த சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இவர் மீது வழக்கு தொடரலாம் எனக் கூறப்படுகின்றது. அவர் ஜனாதிபதியாக இருந்த போது சிறப்பு விடுபாட்டு உரிமை காரணமாக அவர் மீது வழக்கு தொடர சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை என்பது முக்கிய விடயம்.

கோட்டாபய நாடு திரும்புகிறார் என்ற செய்தி தெரிய வந்ததும், கோட்டாபய இழைத்த குற்றங்களுக்காக அவர் நீதியின் முன்பாக நிறுத்தப்படல் வேண்டும். இதற்காக அவர் நாடு திரும்பியதை நாம் வரவேற்கிறோம்” என இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் தரிந்து ஜெயவர்தன கூறியிருந்தமை முக்கிய விடயம்.

இந்த விடயத்தில் உள்ளூரில் உள்ளவர்கள் மாத்திரமின்றி சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.  2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், தமிழ் கைதிகளுக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகளை  முன்வைத்து அமெரிக்க  நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், அவருக்குள்ள ராஜதந்திர சிறப்புரிமை காரணமாக அவருக்கு எதிராக வழக்குகளை முன்னெடுக்க முடியாதிருந்தது. தற்போது அதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதில் இன்னுமொரு விடயமும் அடங்கியுள்ளது.

கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திய நெருக்கடிகளை முன்வைத்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும் அல்லது அவர் கைது செய்யப்பட வேண்டும் என ஒரு சாரார் கூறினாலும் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பேச்சுக்களே அதிகரித்துள்ளன.

அக்காலகட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பேசப்பட்டால் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவும் இந்த வட்டத்துக்குள் வர வேண்டியிருக்கும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரும் பதில் கூற வேண்டியவராக இருப்பார். சில நேரங்களில் அவரும் வழக்குகளை சந்திக்க வேண்டி வரலாம்.

எது எப்படியானாலும் கோட்டாபயவின் மீள் வருகையானது பொதுஜன பெரமுனவினர் இன்னும் பலமாக இருக்கின்றனர் என்ற மாயையை மக்கள் மத்தியில் உருவாக்க முன்னெடுக்கப்பட்ட ‘தந்திரம்’ என்று கூறப்பட்டாலும், அவர் வருகை தந்த பின்னர் அடித்துப் பிடித்துக்கொண்டு அவரை பார்க்கச் சென்ற மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் மத்தியில், ‘குறைமதிப்பு’ ஏற்பட்டிருக்கின்றது.

சிவலிங்கம் சிவகுமாரன்