சர்ச்சை பாதிரியாருடன் ராகுல் கலந்துரையாடல்: அண்ணாமலை கண்டனம்

91 0

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம் சென்று அங்கிருந்த பாதிரியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இயேசுநாதர் கடவுளின் வடிவமா, இது சரிதானா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இயேசுவே உண்மையான கடவுள் என்றார்.

கடவுள் அவரை ஒரு உண்மையான மனிதராக வெளிப்படுத்துகிறார், சக்தியை போல் அல்ல என்றும் ஜார்ஜ் பொன்னையா கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் ராகுல் காந்தி உரையாடியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல் உரையாடும் வீடியோவை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- 60 குளிரூட்டப்பட்ட கேரவன்களுடன், இந்தியாவை பிரிக்க நினைக்கும் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை, அந்தோலன் ஜீவி, தேச விரோதிகள் மற்றும் நமது சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை சந்தித்த பிறகு கன்னியாகுமரியில் நிறைவடைந்திருக்கிறது.

இந்த யாத்திரையில் தமிழ்நாட்டிலிருந்து வெகு சிலரே கலந்து கொண்டதால், ராகுல் காந்தியின் செல்வாக்கை ஈடுகட்ட ராஜஸ்தானில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டனர். ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கலந்துரையாடலில் ராகுல் காந்தி கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த இழிவான விவாதத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இந்த கலந்துரையாடல், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.