சவுதியிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள இரு தரப்பு பேச்சு

209 0

வருடத்துக்கு 6 பில்லியன் அமரிக்க டொலர் பெறுமதியான  எரிபொருளை சவுதி அரசிடமிருந்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு  பெற்றுக்கொள்வது தொடர்பில்  சவுதி அரசுடன் இரு தரப்பு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியாக  சவுதி அரேபியா சென்றிருந்த  சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் இந்த பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஜனாதிபதியின் விஷேட பிரதி நிதியாக சவுதியில் தங்கியிருந்ததுடன், அந்த விஜயம் தொடர்பில் அமைச்சர்  கடந்த திங்களன்று அமைச்சரவையிலும்  தெளிவுபடுத்தப்ப்ட்டுள்ளது.

அதன்படி, விவசாயத்துக்கான உர உற்பத்தி,  கனிய எண்ணெய் களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தல் , எரிபொருள் விநியோக நிலையங்களை அமைத்தல்,  சுத்திகரிப்பு நிலையங்களை நவீன மயப்படுத்தலும் விரிவாக்கலும், கனிய வள வாய்ப்புக்கள் மற்றும்  மீள் புதிப்பிக்கத்தக்க சக்தி வளங்களை விருத்தி செய்தல்  போன்ற துறைகளில் சவுதி முதலீடுகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் நஸீர் அஹமட்  இலங்கை ஜனாதிபதியின் பிரதி நிதியாக சவூதியிடம் யோசனைகளை முன் வைத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமானால்,  டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் ஸ்திரத் தன்மையை எட்டும் என  தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர்  வலீத் அல் குரைஜித் ரியாத்தை கடந்த வாரம் சந்தித்த  அமைச்சர் நஸீர் அஹமட், சவுதி மன்னர் மொஹம்மட் பின் சல்மானுக்கு  இலங்கைக்கு விஜயம் ஒன்றினை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது, சவுதி  அபிவிருத்தி நிதியத்துக்கும் அமைச்சர் நஸீர் அஹமட்  அதன் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் சுல்தான் அல் மஷாட்டை சந்தித்துள்ளார்.

இதன்போது  இலங்கைக்கு கடன் வழங்கும் ஏனைய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படுமானால்,  சவுதி அபிவிருத்தி நிதியம் நெகிழ்வுத் தன்மையுடன் அதில் பங்கேற்கும் எனவும்  அது இலங்கைக்கு சாதகமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.