தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

194 0

 தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 45,988 மாணவர்கள் பங்கேற்றனர்.

தேசிய தேர்வு முகமையிடம் (என்டிஏ) இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 110 மனநல ஆலோசகர்களைக் கொண்டு, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களில் 564 பேர் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர்ச்சியான மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.